×

மேகதாது அணை விவகாரத்துக்கு மத்தியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு: வரும் 25ம் தேதி நடக்கிறது

புதுடெல்லி: மேகதாது அணை விவகாரத்துக்கு மத்தியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடக்கவிருந்த நிலையில் வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேகதாது என்ற இடத்தில் ரூ. 9,000 கோடி மதிப்பில் புதிய அணையை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசின் அனுமதியை பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தலைநகர் டெல்லியில் இருந்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆன்லைனில் இன்று (ஜூன் 22) நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இக்கூட்டம் வரும் 25ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதியதாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள அரசுகள், ஆணைய கூட்டத்தில் பங்கேற்கும் நிபுணர், அதிகாரிகள், பிரதிநிதிகள் சிலரை மாற்ற வாய்ப்புள்ளது. அதனால் வரும் 25ம் தேதிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, வரும் 25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கும்பட்சத்தில், மேகதாது அணை கட்டும் அறிவிப்பு குறித்து, தமிழக அரசின் பிரதிநிதிகள் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யவுள்ளனர். அதேநேரம், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான நிரந்தர தலைவரை நியமிப்பது குறித்தும், அன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேகதாது மற்றும் நிரந்தர தலைவர் நியமனம் தொடர்பாக தமிழக பிரதிநிதிகளின் கருத்துக்கு, கர்நாடக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


Tags : Caviar Management Commission ,Exalted Dam , Cauvery Management Commission meeting adjourned amid Megha Dadu dam issue
× RELATED காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது...